சிம்பு – தேசிங்கு பெரியசாமி இணையவுள்ள கதை குறித்து தயாரிப்பாளர் தாணு சிலாகித்து பேசியிருக்கிறார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதலில் இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் பொருட்செலவு அதிகமாக இருப்பதால், தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டது.
இதனிடையே, தேசிங்கு பெரியசாமி படத்தின் கதை குறித்து பேட்டியொன்றில் தாணு பேசியிருக்கிறார். அதில், “தேசிங்கு பெரியசாமி படத்தின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள உச்ச நடிகர்களிடம் உட்காரவைத்து கதை கேட்க வைத்தேன். அனைவருமே கதை சூப்பர் என்கிறார்கள். ஆனால், அதற்கான நேரம், உழைப்பு என கணக்கில் கொண்டு தள்ளிப் பண்ணலாமே என்று சொன்னார்கள்.
தேசிங்கு பெரியசாமி, சிம்புவிடம் போய் கதையைச் சொல்லிவிட்டார். எனக்கு போன் செய்து சிம்பு ‘ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா, நம்ம செய்து விடலாமே’ என்று சொன்னார். ‘நீ நேரில் வரும்போது பேசிக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டேன். ஏனென்றால் இது பட்ஜெட்டில் எடுக்கக் கூடிய படமல்ல. ‘பாகுபலி’ மாதிரி எடுக்க வேண்டிய படம்.
சரியான நடிகர் நடித்து, தேசிங்கு பெரியசாமி இயக்கினால் ‘பாகுபலி’யை விட இரண்டு மடங்கு அப்படம் இருக்கும். அதற்கு இடையே சின்னப் படம் ஒன்று செய்வார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு அந்தப் படம் பண்ணுவார் என தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார் தாணு.