“அஜித் விரும்பினார், அவருக்காக செய்ததுதான் ‘விடாமுயற்சி’ படம்” என்று இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
‘விடாமுயற்சி’ படம் குறித்து முதன்முறையாக பேட்டியொன்றை அளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. அதில், “இந்தப் படம், அசாதாரண ஹீரோவை கொண்டிருக்கும். வழக்கமான, மாஸ் ஆக்ஷன் பொழுதுபோக்கு படங்களை போல் அல்ல. நான் விரும்புவதெல்லாம், எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி , திறந்த மனதுடன் திரையரங்குக்கு வருவதுதான்.
‘விடாமுயற்சி’ என்பது, உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண மனிதனைப் பற்றி பேசும் படம். ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் அந்த சாதாரண மனிதன் தனக்கு இருக்கும் சக்திக்கு உட்பட்டு போராடுகிறான். இதைத்தான் அஜித் செய்ய விரும்பினார். நான் அதை அவருக்காக செய்தேன்” என்று தெரிவித்துள்ளார் மகிழ் திருமேனி.
இதனிடையே, பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.