ஏமன் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் ஏமனின் ஜவுஃப் மாகாணத்தில் உள்ள அல் ஹசாம் நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாவும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 73 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செப். 8-ம் தேதி அதிகாலையில் தெற்குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதில் குடிமக்கள் காயமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் அபா சர்வதேச விமானநிலையம், கிங் காலி விமான தளம், அபா மற்றும் ஜஸானில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 73 பேர் காயமடைந்துள்ளனர்’’ என கூறப்பட்டுஉள்ளது.















