கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
தினமும் வீட்டின் வெளியே அமர்ந்து அக்கம் பக்கத்தினரின் பேச்சுகளை உற்றுக் கவனிக்கும் இவர், தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை உள்ளடக்கிய சிறப்பு ஆவணக் காப்பகம் ஒன்றை தனது வீட்டில் பராமரித்து வருகிறார்.
திருமணத்தை மீறிய உறவு, குடும்பச் சண்டைகள் போன்ற சுவாரசியமான உள்ளூர் செய்திகளைத் தேவைப்படுவோருக்குப் பணத்திற்கு விற்று வரும் இவர், ஒருமுறை நபர் ஒருவரின் ரகசியத்தைக் காப்பதற்காக சுமார் 700,000 கொலம்பிய பேசோக்கள் (தோராயமாக ரூ.21,073) வரை கட்டணமாகப் பெற்றுள்ளார்.
இந்த வித்தியாசமான தொழில், தனது அன்றாட செலவுகளுக்கு உதவுவதோடு, இரண்டு வீடுகள் வாங்கவும் தனக்கு உதவியதாக மிரியம் தெரிவிக்கிறார். புரளியை விற்பதன் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாணயங்கள் மற்றும் நோட்டுகள் நிரம்பிய ஒரு பெரிய பணப் பெட்டியையும் அவர் பார்வையாளர்களுக்குக் காட்டினார்.
‘கிசுகிசுக்களின் ராணி’ தொடக்கத்தில் இவரது இந்தச் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோதிலும், ‘கிசுகிசுக்களின் ராணி’ என்று அழைக்கப்படும் மிரியம், தனது பல ஆண்டு கால அனுபவம் மற்றும் துல்லியமான ஆதாரங்கள் மூலம் இத்தொழிலில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.















