வங்கதேசத்தில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்’ என்ற நாட்டுப்புற இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு வங்கதேசம் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நட்புரீதியாக இவரது வீட்டுக்கு வருகை தந்தது மிகுந்த கவனம் பெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராகுல் ஆனந்தாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல்கதவை உடைத்துக் கொண்டுஉள்ளே சென்றது. வீட்டை சூறையாடிய அக்கும்பல் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தது. பிறகு அங்கிருந்த ஏராளமான இசைக்கருவிகளுடன் வீட்டுக்கு தீவைத்தது.இதற்கிடையில் தாக்குதலில் இருந்த தப்பிக்க ராகுல் ஆனந்தா, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு எப்படியோ வெளியேறினர். பிறகு அவர்கள் பத்திரமான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
‘ஜோலர் கான்’ இசைக்குழு தனது பதிவில் “தன்மோண்டியில் உள்ள வீடு, ஒரு காலத்தில் ராகுல் ஆனந்தா மற்றும் ‘ஜோலர்கான்’ குழுவின் சரணாலயமாக இருந்தது. இது ஒரு குடியிருப்பு மட்டுமல்ல, எண்ணற்ற பாடல்கள்மற்றும் கருவிகள் வடிவமைக்கப்பட்ட ஒரு படைப்பு மையமாக இருந்தது. அனைவரையும் வரவேற்ற இந்த வீட்டில் ராகுல் வங்கதேசத்தின் தனித்துவமான இசையை வடிவமைத்தார்” என்று கூறியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த கலவரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் செலிம் கான் மற்றும் அவரது மகனும் நடிகருமான சாந்தோ கான் ஆகியஇருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாக ‘தி டெய்லி ஸ்டார்’ நாளேடு தெரிவித்துள்ளது. வங்கதேச தந்தை என்று போற்றப்படும் ஷேக்முஜிபுர் ரஹ்மான் பற்றி திரைப்படம்எடுத்த செலிம் கான். டோலிவுட்டிலும் (கொல்கத்தா) பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.