சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று ‘கதாநாயகி’. ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ்.அங்கமுத்து, ஏ.கருணாநிதி, எஸ்.ராமாராவ் உட்பட பலர் நடித்தனர்.
திரைக்கதை, வசனத்தை டி.கே.கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா, கண்ணதாசன் பாடல்கள் எழுதினர்.
நாடகப் பின்னணியில் உருவான கதை இது. நாடகத்தில் நடிப்பதை லட்சியமாகக் கொண்ட பத்மினி, வீட்டில் இருந்து வெளியேறி நாடகக்குழு ஒன்றில் சேர்கிறார். அதன் உரிமையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் அவரைக் காதலிக்கிறார். இதைத் தொடர்ந்து பத்மினிக்குப் பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. அதை அவரும் காதலனும் எப்படித் தீர்க்கிறார்கள் என்பது கதை.
படத்துக்குள் இடம்பெற்ற நாடகக் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் இடம்பெற்ற ‘இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்’, ஏ.எம்.ராஜா, ஸ்வர்ணலதா பாடிய ‘கற்பனை கனவிலே’, ஏ.எம்.ராஜா, ஜமுனா ராணி பாடிய, ‘துரையே இளமை பாராய்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பிரிட்டிஷ் காமெடி படமான ‘ஹேப்பி கோலவ்லி’ என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இதை உருவாக்கியதாகச் சொல்வார்கள்.
1955-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தில், சிறந்த இயக்கம், நடிப்பு , நகைச்சுவை எல்லாம் இருந்தும் கணிக்கக் கூடிய திரைக்கதையால் பெரும் வெற்றியைப் பெறவில்லை.