கிருஷ்ணகிரியில் விடிய விடிய கனமழை: வீடுகள், பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்

0
21

கிருஷ்ணகிரியில் விடிய விடிய பெய்த கனமழையால், வீடுகள் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

பழைய பேட்டையில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், பேருந்துகள் மெதுவாகச் சென்றன.

இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். நல்லதம்பி தெரு 2-வது குறுக்குத் தெரு, நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததுடன், சில வீடுகளுக் குள்ளும் புகுந்தது.

பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பல இடங்களில் கழிவுநீர்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.

100.7 மி.மீ. மழை

கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 100.7 மி.மீ. மழை பதிவானது. கேஆர்பி அணைப் பகுதியில் 77.40 மி.மீ., நெடுங்கல் பகுதியில் 49.80 மி.மீ., போச்சம் பள்ளியில் 25 மி.மீ., ராக்கோட்டையில் 23 மி.மீ. மழை பெய்தது. தேன்கனிக்கோட்டையில் 36 மி.மீ., ஓசூரில் 18 மி.மீ., கெலவரப்பள்ளியில் 20 மி.மீ. மழை பதிவானது.

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,382 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 48.75 அடியாக உள்ளதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

இதனால் அணை கீழ்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலாப் பயணிகள் அணைப் பகுதிக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் தரைப்பாலம் சேதம்

கிருஷ்ணகிரி அருகே சவுட்டஅள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையின் குறுக்கே, பொதுமக்கள் தங்கள் சொந்தச் செலவில் ரூ.8 லட்சத்தில் அமைத்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் சேதமடைந்தது.

இதனால், கிராம மக்கள் ஓடையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைக்குச் செல்ல 5 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, புதிய தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலத்தில் நீரூற்று

பர்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (35), என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இடி இறங்கியது. அப்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரூற்று தோன்றி தண்ணீர் பெருக்கெடுத்து, விவசாய நிலத்தில் தேங்கி நின்றது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here