நியூஸிலாந்து ஏ அணியுடனான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா ஏ, நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வ முதலாவது டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் லின்காயின் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது நியூஸிலாந்து ஏ அணி. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் நியூஸிலாந்து ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து ஏ அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ரைஸ் மரியு 76, கர்ட்டிஸ் ஹீப்பி 44, டீன் பாக்ஸ்கிராப்ட் 51, கிறிஸ்டியன் கிளார்க் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா ஏ அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ், ஆகிப் நபி ஆகியோர் தலா 3, ஆகாஷ் தீப் 2, முகேஷ் சவுத்ரி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, கே.எல்.ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல்லும், சாய் சுதர்சனும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். ஆட்டநேர இறுதியில் தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், சாய் சுதர்சன் 39 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
98 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இந்திய ஏ அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாய் சுதர்சன் 184 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரேல் 2 ரன்களில் வெளியேறினார்.
5-வது விக்கெட்டுக்கு யாஷ் ரத்தோட் உடன் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 248 பந்துகளில் 199 ரன்கள் எடுத்து தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார்.
3-ம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இந்த போட்டியில் தற்போது 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரத்தோட் 66 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களுடன் உள்ளார்.














