சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி, விசாரணைக்கு மற்றொரு நாளில் ஆஜராக அனுமதி கோரி அவரது வழக்கறிஞர் கடிதம் அளித்துள்ளார்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், கணேசன் உள்ளிட்ட 8 பேரை எஸ்ஐடி போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
ஜெம் வீரமணி மீது 12 சிறுமிகள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது 8 போக்சோ வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவும் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் நிலையில் கடந்த 23-ம் தேதி எஸ்ஐடி-க்கு தகவல் தெரிவிக்காமல் அவர் சிங்கப்பூர் செல்ல முயன்றுள்ளார்.
அவரை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வீரமணியின் குற்றச் செயல்கள் குறித்தும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது அர்ச்சனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடியவில்லை.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மருத்துவமனையில் இருந்த அர்ச்சனாவிடம் எஸ்ஐடி போலீஸார் சம்மன் வழங்கினர். ஆனால் அவர் நேற்று ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர் விக்னேஷ், எஸ்ஐடி முன்பு ஆஜரானார்.
அர்ச்சனாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி, மருத்துவ அறிக்கையை அவர் சமர்ப்பித்ததுடன், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரினார். இது தொடர்பாக எஸ்ஐடி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
4 பேரிடம் தீவிர விசாரணை
இதற்கிடையே இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோரை காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரித்து வருகிறது.
அவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த பதில்களை வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் போலீஸார் பதிவு செய்தனர்.
நேற்று இரவு வரை விசாரணை தொடர்ந்தது. நால்வரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ்
இதற்கிடையே வீரமணி வழக்கில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் 5 நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க எஸ்ஐடி அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எஸ்ஐடி தெரிவித்துள்ளது.














