ஹரா Review – ‘வெள்ளி விழா’ நாயகன் மோகனின் கம்பேக் எப்படி?

0
165

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன், 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 90களில் அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2008-ல் வெளியான ‘சுட்டப் பழம்’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’.

கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே, குடும்பம் நிலைகுலைகிறது. இதன்பிறகு இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்குகிறார்.

இன்னொருபுறம் ஹீரோவால் ஒருகாலத்தில் பாதிக்கப்பட்டு வேலை, குடும்பத்தை இழந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் தலைமையிலான ஆட்கள் இவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். தனது மகளின் மரணத்துக்கான காரணம் குறித்த தேடலின்போது ஹீரோ செய்யும் சில வேலைகள் போலீஸின் கவனத்தை இவரை நோக்கி கொண்டு வந்துவிடுகின்றன. ஹீரோவின் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைத்ததா, இறுதியில் என்னவானது என்பதே ‘ஹரா’ படத்தின் திரைக்கதை.

ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர் மோகன். தான் நடிக்கும் படங்கள் என்றாலே எப்படியும் ஓடிவிடும் என்ற மினிமம் கேரன்டியை தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் கொடுத்தவர். அப்படிப்பட்ட ஒரு நடிகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வருகிறார் என்றால் அப்படம் எப்படி இருந்திருக்க வேண்டும்?

ட்ரெய்லரிலேயே இது ஒரு பழிவாங்கும் கதைதான் என்பதை நிறுவிய இயக்குநர், திரைக்கதையில் அதற்காக எந்தவொரு சிரத்தையும் எடுக்காமல் தேமேவென்று எடுத்து வைத்திருப்பது ஏமாற்றம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பெரும்பாலான காட்சிகள் பயங்கர அமெச்சூர்த்தனத்துடனே நகர்கின்றன. டப்பிங், வசனங்கள், காட்சியமைப்பு, நடிப்பு என அனைத்துமே ஒரு பெரிய திரை சீரியலை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வையே தருகின்றன.

படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் மோகன் மட்டுமே. எந்தவித அலட்டலும் இல்லாமல் நிதானமான நடிப்பை வழங்கி தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை காப்பாற்ற முயல்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவருடைய மெனக்கெடல் தெரிகிறது. ஆனால், இவை எதுவும் படத்தின் மோசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் முன்னால் எடுபடவில்லை. படத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பை கொடுத்திருப்பவர் அனுமோல். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். இவர்கள் இருவர் தவிர மற்ற யாருடைய நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

படத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். குறிப்பாக யோகி பாபு எல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டார் என்பதற்காகவே வைக்கப்பட்ட அந்த நீதிமன்ற காட்சி எல்லாம் முனை மழுங்கிய ஒரு கத்தியை கழுத்தில் வைத்து கரகரவென்று அறுப்பதை போல இருக்கிறது. இதுபோன்ற கோர்ட் சீன்களை படங்களில் வைப்பவர்கள் மீது நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தால் தேவலாம்.

தமிழில் எத்தனையோ பழிவாங்கும் கதைகள் இதற்குமுன் வந்துள்ளன. அவற்றின் காட்சிகளை எல்லாம் பட்டி டிங்கரிங் செய்து அங்கொன்று இங்கொன்று வைத்திருந்தால் கூட ஓரளவும் பார்க்கும்படி வந்திருக்கும். ஆனால், நேர்த்தி என்பதே கிஞ்சித்தும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாங்கு மாங்கு என்று படக்குழு உழைத்தது போல தெரிகிறது.

படத்தின் வசனங்கள் எல்லாம் கேமராவை ஆன் செய்துவிட்டு ஸ்பாட்டிலேயே மனதில் தோன்றியதை எழுதியது போல இருக்கிறது. அதிலும் மகள் வயதுக்கு வந்ததற்காக பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று மோகன் பேசுவதெல்லாம் அபத்தத்தின் உச்சம். அவ்வளவு நேரம் ஒவ்வொரு காட்சியாக காட்டியதை எல்லாம் உடைக்கும் வகையில் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் என்ற பெயரில் ஒன்றை கொண்டு வந்து வைத்திருப்பது பார்வையாளர்களை முட்டாளாக்கும் செயல்.

சாதாரண பழிவாங்கும் கதையில் தீவிரவாதம், மத நல்லிணக்கம், மருந்துகளில் கலப்படம் என மொத்தமாக எதையோ கிண்டி வைத்திருப்பது தலையை சுற்றவைக்கிறது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்த மோகன் நல்ல திரைக்கதையும், நேர்த்தியான காட்சியமைப்புகளும் கொண்ட ஒரு கதையை தேர்வு செய்திருந்தால் தமிழ் சினிமாவின் சில்வர் ஜூபிளி ஸ்டாருக்கு ஓர் உண்மையான கம்பேக் கிடைத்திருக்கும்.