பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது என்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத் தருவதுடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சக்திவாய்ந்த உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து வெற்றியடையவும் எதிர்காலத்தில் மென்மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துக்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள அவர், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி, மணிஷா, மாரியப்பன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்திய நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்திய அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். கடந்த 3 பாராலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். உலக அளவிலான போட்டிகளில் மேலும், மேலும் சாதனைகளை படைக்க மாரியப்பனுக்கு எனது வாழ்த்துகள். இதேபோட்டியில் வெள்ளிப் பதக்கம்வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் எனது வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் நித்யஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள். இவர்கள் மூலம் தமிழகத்தின் விளையாட்டு வீரர்கள் ஊக்கமடைகிறார்கள். இவர்கள் தொடர்ந்து உலக அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து, சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அவரது சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
வி.கே.சசிகலா: பாராலிம்பிக் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ள வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.