தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அறியாமை காரணமாக சரிவிகித உணவை குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இல்லை. இதனால் ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், போதிய வளர்ச்சி இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 விதிகளின்படி, 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும்பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துணவு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 449 குழந்தை மையங்கள் மூலமாக ஊட்டசத்துக்காக பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 6 மாதம் முதல் 2 வயதுவரை உள்ள 11 லட்சம் குழந்தைகள், 3 லட்சத்து 26 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள், 2 லட்சத்து 84 ஆயிரம் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுகின்றனர்.
குழந்தைகளுக்கான சத்துமாவில், 100 கிராமில் வறுத்த கோதுமை மாவு 45.50 சதவீதம், முளைக்கட்டிய கேழ்வரகு 5 சதவீதம், கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு16.50 சதவீதம், வெல்லம் 24 சதவீதம், வறுத்த நிலக்கடலை 8 சதவீதம், வைட்டமின் மற்றும் தாதுக் கலவை 1 சதவீதம் இடம்பெற்றுள்ளன.
இது 500 கிராம் பாக்கெட் வடிவில், வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடும் வகையில் குழந்தை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு குழந்தைகளுக்கு தலாரூ.8, கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு தலா ரூ.9.50 வீதம் அரசு செலவிடுகிறது. இத்தகைய சத்துமாவை வெளியில் வாங்கினால் 500 கிராம் சுமார் ரூ.250செலவிட வேண்டியிருக்கும். ஆனால் குழந்தை மையங்களில் சரியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.சேவை கிடைக்கவில்லை: வட சென்னையில் கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், வியாசர்பாடி சென்ட்ரல் அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பச்சிளம் குழந்தைகளை, குழந்தைகள் மையங்கள் கணக்கெடுப்பதில்லை. பெற்றோரே விரும்பி சென்றாலும், சத்துமாவு வழங்குவதில்லை என பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறும்போது, சென்னை தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், குழந்தை மைய சேவை பகுதிக்குள் வராத இடங்கள் அதிகமாக உள்ளன. அவற்றை கணக்கெடுத்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கிடையில், சென்னை பெரம்பூர் தாலுகா வியாசர்பாடி, உதயசூரியன் நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு, சிலர், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட 5-க்கும் மேற்பட்ட சத்துமாவு பாக்கெட்டுகளை கிழித்து, சாலையில் கொட்டி, சாலையில் திரியும் ஆடுகளுக்கு தீவனமாக கொடுத்துள்ளனர்.அந்த சத்துமாவு கடந்த ஜூலை 18-ம் தேதிதான் தயாரிக்கப்பட்டுள்ளது. காலாவதியாக நவ.14-ம் தேதிவரை அவகாசம் உள்ள நிலையில் கால்நடை தீவனமாக கொட்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இவ்வாறு வீணடிக்கப்படுவதை தடுத்து, சரியான பயனாளிகளை உறுதிசெய்து, அவர்களுக்கு மட்டுமே சத்துமாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து `இந்து தமிழ் திசை’ சார்பில் சமூக நலத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “இச்சம்பவம் குறித்து எங்கள் கவனத்துக்கு வந்ததும், தொடர்புடைய பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் வீடுகளில் நேற்றே ஆய்வு செய்தோம். இன்றும் ஆய்வு தொடர்கிறது. சத்து மாவை ஆடுகளுக்கு தீவனமாக கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.