சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை

0
15

உள்நாட்டு கிரிக்கெட்டோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டோ அணித் தேர்வு, பிட்ச், திறன் கண்டுபிடித்தல் போன்ற இன்றியமையாத துறைகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ரவி சாஸ்திரி, கங்குலி, சேவாக், கும்ப்ளே போன்ற மூத்த வீரர்களிடம் ஆலோசனை பெறுவதில் தவறில்லை, பிசிசிஐ இதனை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்தியக் கிரிக்கெட்டில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (CAC) அதிகார வரம்பையும் பொறுப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (BCCI) வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி செயல்பட்ட விதம் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மட்டுமே கோப்பையை வெல்வதில் அணி திருப்தியடைந்தது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் கடந்த சில சீசன்களாக இதே விதிமுறை விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது ஆலோசனைக் குழு தனது குரலை வலுவாகப் பதிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

2022-ல் ஆலோசனைக் குழுவிற்கு அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பராஞ்ச்பே, சுலக்ஷனா நாயக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணியாக இருந்து வந்தது. ஆனால், அந்தக் குழு தற்போது தொடர்ந்து செயல்படுகிறதா அல்லது கலைக்கப்பட்டுவிட்டதா என்பது தெளிவாக இல்லை.

இது குறித்து கவாஸ்கர், “தேர்வுக்குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர் ஆகியோரைத் தேர்வு செய்வதுடன் ஆலோசனைக் குழுவின் பொறுப்புகளை விரிவுபடுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டி அட்டவணைகள் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனிக்கும் வகையில் அமைக்க வேண்டும். மிகுந்த அனுபவம் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நிபுணத்துவத்தை இந்தக் குழுவுக்குப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்களை இதில் இணைக்கலாம். பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரும் இதில் இடம்பெறலாம்.

பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தும்போது, அதன் கருத்துகளுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைக்கும் . இதேபோன்று பெண்கள் கிரிக்கெட்டுக்கும் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட தனிக் குழுவை அமைத்து, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்தும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்

‘இப்படி ஒரு குழு உருவாவது குறித்துச் சிந்திப்பதே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இது ஒருநாள் நிஜமாகுமா, அல்லது வெறும் கனவாகவே முடிந்துவிடுமா?’ என்று அவர் கேள்வியுடன் கவாஸ்கர் கருத்தோட்டத்தை நிறைவு செய்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here