இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் சயீம் அயூப் என்ற பேட்டரை பாகிஸ்தான் அணி திடீரென அழைத்து, அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் 2011-ல் சேவாக் இதே போல் அழைக்கப்பட்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் தராதரமற்ற ஒப்பீடு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான நாசர் ஹுசைன்.
சயீம் அயூபை நேரடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைத்தனர். அவர் இரண்டு டக் அவுட் ஆனார். இதனைக் குறிப்பிட்ட நாசர் ஹுசைன், “இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஒருவிதமான அவமரியாதை மற்றும் அலட்சியமாகும். எந்தவொரு கிரிக்கெட் வீரரும் சொல்வது போல, டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகவும் சவாலான வடிவம். இங்கிலாந்தில் தொடக்க வரிசையில் பேட்டிங் செய்வது மிகக் கடினமான பணியாகும்; அப்படிப்பட்ட நிலையில், உலகின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து ஒருவரை வரவழைத்து, ‘வாழ்த்துகள்’ என்று சொல்லி களமிறக்கிவிட முடியும் என்று நினைப்பது சரியல்ல.” என்று ஒரு நாட்டின் முடிவை கிரிக்கெட்டுக்கு அவமரியாதை என்று விமர்சிக்கிறார். இதற்கு நாசர் ஹுசைனுக்கு உரிமையில்லை.
இதுவே தவறு. இந்நிலையில், இன்னும் ஒரு படி மேலே போய், “உங்களுக்கு நினைவிருந்தால், வீரேந்தர் சேவாக், இந்த மைதானத்தில் அதை முயன்று பார்த்தார். இதற்காகவே அவர் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். ஆனால் சேவாக் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ‘பூஜ்ஜியம்’ எடுத்தார்; இத்தனைக்கும் சயீமை விடசேவாக் அனுபவமிக்கவர்” என்று சேவாக்கையும் தேவையில்லாமல் ஒப்பிட்டுள்ளார் நாசர் ஹுசைன்.
ஹுசைன் குறிப்பிடும் அந்த 2011 தொடருக்கு முன்பாக சேவாக் தோள்பட்டைக் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், காதுப்பிரச்சினையும் அவருக்கு இருந்தது. இதனால் அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் போதிய பயிற்சி இல்லாமல் நேரடியாக ஓப்பனிங் இறங்கினார். இரண்டு டக்குகளை அடித்தார். இதை வைத்து சேவாக்கையும் சயீம் அயூபையும் ஒப்பிடலாமா என்பதே நம் கேள்வி.
2001-ல் தென் ஆப்பிரிக்காவில் ப்ளூம்பாண்டெனில் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் விளாசிய பிறகே சேவாக் ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் முதல் நாளில் 195 அதிரடி ரன்களை விளாசினார். சிட்னியில் 72. பிறகு பாகிஸ்தானின் முல்டானில் அதிரடி முச்சதம் (309). ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் 155, கான்பூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 164, பாகிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் 173, ஈடன் கார்டன்ஸில் 81, பிறகு பெங்களூருவில் 201.
2006-ல் பாகிஸ்தான் லாகூரில் 254, வெஸ்ட் இண்டீஸில் 180, 2008-ல் இதே போன்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியா திணற, வாசிம் ஜாஃபர் சரியாக ஆடாத போது இயன் சாப்பல், ‘வீரு எங்கே?’ என்று ஒரு பத்தியே எழுதினார். உடனே வீரு அழைக்கப்பட்டார். அந்த பெர்த் டெஸ்ட்டில் இந்தியா வென்றது, பிறகு அடிலெய்டில் 151 அழகான ரன்களை எடுத்தார், ஒரு செஷன் முழுதும் பவுண்டரியே அடிக்காமல் ஆடியதை ஆஸ்திரேலிய ஜாம்பவான்களே வாயைப்பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு அடுத்த டெஸ்ட்டே சென்னையில் 319 ரன்களை விளாசித்தள்ளினார். அதுவும் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், மகாயா நிடினி, ஜாக் காலீஸுக்கு எதிராக. பிறகு காலே மைதானத்தில் இலங்கையின் புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் சச்சின், திராவிட், லஷ்மண் உள்ளிட்ட நடுவரிசையை சிதைத்துக் கொண்டிருந்த தருணத்தில் 201 நாட் அவுட் தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை நாட் அவுட். இதே டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடினமான தொடரில் இந்தியா இந்த டெஸ்ட்டில் வென்று தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இதன் பிறகு இலங்கைக்கு எதிராக 2009-ல் கான்பூரில் 131, பிறகு மும்பையில் 293, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் 109, ஈடன் கார்டன்ஸில் 165, இலங்கைக்கு எதிராக காலேயில் 109, பிறகு கொழும்புவில் 109, 2010-ல் நியூஸிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் 173. இத்தனை அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி ரிச்சர்ட்ஸ், ராய் பிரெடெரிக்ஸ் ரேஞ்சில் சேவாக்கை ஒப்பிட்டு வரும் வேளையில்தான் இங்கிலாந்து தொடரில் இந்தியா சரிவடைந்து கொண்டிருந்த போது சேவாக் அவசரமாக ஆட வைக்கப்பட்டார். ஆனால் அப்போது அவர் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார், காதில் பிரச்சனை ஏற்பட்டது இதனையடுத்து இரண்டு டக்குகளை அவர் அடித்தார்.
இந்த புள்ளி விவரங்களை நாசர் ஹுசைன் நிச்சயம் அறிந்திருப்பார். ஆனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சச்சினையோ, சேவாகையோ மட்டம் தட்டுவதென்பது இங்கிலாந்து முன்னாள் வீரர்களுக்கு ஒரு வாடிக்கையாகப் போய்விட்டது. ஆனால் நிறைய தருணங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அவர்கள் திருந்தியபாடில்லை.














