யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ மேல்முறையீட்டு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா நேற்று விலகினார்.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததால் இவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளில் தேசியபுலனாய்வு முகமை கைது செய்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்குக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. யாசின் மாலிக் செய்த குற்றத்தால் ராணுவ வீரர்கள்பலர் இறந்துள்ளனர். இதற்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ஈடாகாது. குற்றத்தை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக் போன்ற கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்காவிட்டால், தண்டனை பயம் முற்றிலும் அழிந்து விடும். தீவிரவாதிகள் அனைவரும் மரண தண்டனையை தவிர்க்க வழிவகுக்கும். எனவே, யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என என்ஐஏ கோரியது.
“ஜம்மு காஷ்மீரை, இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதுதான் யாசின் மாலிக் செய்த குற்றம். இது மிகவும் அரியவகை குற்றம் அல்ல” என கருத்து தெரிவித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என என்ஐஏ.வின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ மனு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி பிரதிபாஎம் சிங் மற்றும் அமித் சர்மா ஆகியார் அடங்கிய அமர்வில் பட்டியலிடப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது. யாசின் மாலிக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி திகார் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அமித் சர்மா அறிவித்தார்.
இதையடுத்து நீதிபதி அமித் சர்மா உறுப்பினர் அல்லாத வேறு அமர்வில் இந்த வழக்கை ஆகஸ்ட் 9-ம் தேதி பட்டியலிடும்படி நீதிபதிபிரதிபா சிங் கூறினார். அன்றையதினம் யாசின் மாலிக்கை காணொலிமூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.