“ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே சந்திப்பு”- தொகுதி மக்களுக்கு பாஜக எம்.பி கங்கனா நிபந்தனை

0
92

தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள கங்கனா ரனாவத், “இமாச்சல பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என கூறுகிறேன். மேலும், என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதிகளின் பிரச்சினைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் சாமானிய தொகுதி மக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதற்காகவே இந்த முடிவு” என்று கூறியுள்ளார்.

கங்கனாவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. மக்களவை தேர்தலில் கங்கனாவை எதிர்த்து போட்டியிட்ட தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், “கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு. எந்தவித பணியாக இருந்தாலும் சரி, அல்லது கொள்கை விஷயம், தனிப்பட்ட வேலை என எதுவாக இருந்தாலும் மக்கள் அவரை எந்தவித அடையாளமும் இல்லாமல் சந்திக்கலாம். தன்னை சந்திக்க வரும் மக்களை குறிப்பிட்டு ஆவணங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே சந்திப்பேன் எனக் கூறுவது சரியல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.