ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் ஐ.தேவாரம், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்வால்டர் ஐ.தேவாரம். பணிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கை கையாள்வதில் திறன் மிக்கவராக இருந்த இவர், சமூக விரோதிகள், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே, காவல் துறையில் பணிக்கு சேரும் பலரும் இவரை ரோல் மாடலாக ஏற்று தங்களது வழித்தடத்தை அமைத்துக் கொண்டனர்.
பணியிலிருந்து ஓய்வுபெற்று சுமார் 26 ஆண்டுகள் ஆன நிலையில், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி அதை நேற்று வெளியிட்டார். அந்தபுத்தகத்தில் பல்வேறு அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையில் தனது அனுபவங்களை விரிவாக எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் தான் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.
புத்தகத்தை தேவாரம் வெளியிட, அதை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் பெற்றுக்கொன்டார். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபிக்கள் லத்திகா சரண், சைலேந்திர பாபு,தற்போதைய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட பலர் இந்த நூலை அடுத்தடுத்து பெற்றுக்கொண்டனர். தமிழாக்கம் செய்ய உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரி துக்கையாண்டி விழாவில் கவுரவிக்கப்பட்டார்.