“நாட்டுக்கு காத்திருக்கும் அற்புதமான எதிர்காலத்துக்காக…” – பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து 

0
85

3-வது முறையாக பொறுப்பேற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை சரியாக 7.23 மணிக்கு நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நாட்டின் மிக உயர்ந்த பதவியில் 3-வது முறையாக பொறுப்பேற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

‘வசுதைவ குடும்பகம்’ தத்துவங்களுடன் நீங்கள் கருணையுடன் அபரிமிதமான வளர்ச்சி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றின் காலத்துக்கு எங்களை அழைத்துச் சென்று, உலகமே பிரமிப்புடன் பார்க்கும் பெருமைமிக்க தேசமாக எங்களை மாற்றுவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

உங்களது நல்ல ஆரோக்கியத்துக்காகவும், இந்த மகத்தான நாட்டுக்கு காத்திருக்கும் அற்புதமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.