அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பில்10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் 40 வயது ஆன நிலையில் பணியில் சேர்வதால், பணிவரன் முறை மற்றும் பதவிஉயர்வுக்காக, அந்தந்த துறைகளால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, குறிப்பிட்ட சில பிரிவுகளில் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு துறைத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து விலக்க அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, “தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதை கடந்த பார்வைத்திறன், செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடுமற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வுஎழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படும் என்று தமிழக முதல்வரால் கடந்த ஜூன் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, இந்த மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு அந்தந்த பதவிகளுக்குரிய துறைத்தேர்விலிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்டு விலக்களித்து ஆணை வெளியிட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட ஆணை:
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து, அதனை ஏற்று அரசு துறை வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். இதன்படி பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள், புறஉலக சிந்தனையற்ற மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகஅரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் அந்தந்தபதவிகளுக்குரிய உரிய துறை தேர்விலிருந்து நிபந்தனையுடன் விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.
சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 50 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது 3 தடவைகளாவது முயற்சி செய்திருக்கவேண்டும். இதற்கு அத்தாட்சியாக பணிப்பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது இது குறித்து நுழைவுசீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலர் விண்ணப்பிக்கவேண்டும்.