பெங்களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மையில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
பெங்களூரு ஜெயநகர் சாலையோரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ”நான் ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறியாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்தேன். பின்னர் க்ளோபல் வில்லேஜில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தேன். பின்னர் பெங்களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தேன்.
காதல் தோல்வி: அப்போது ஒரு பெண்ணை காதலித்த வந்த நிலையில், ஒரு மோசமான சம்பவத்தால் எல்லாவற்றையும் இழந்தேன். எனது வேலை பறிபோன நிலையில், காதலும் தோல்வியில் முடிந்தது. திடீரென எனது பெற்றோரையும் இழந்ததால், நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். இப்போது மதுபோதைக்கு அடிமையாகி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்துகிறேன்” என விரக்தியோடு கூறினார். இந்த வீடியோவில் அவர் தனது வாழ்க்கையை ஆங்கிலத்தில் விவரித்து கூறியது பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.