கன்னியாகுமரி அருகே எலி காய்ச்சலுக்கு மின் ஊழியர் உயிரிழப்பு

0
52
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த மின் ஊழியர் சுபின் எலி காய்ச்சலால் உயிரிழப்பு
ராஜாக்கமங்கலம் அருகே சோகம்: எலி காய்ச்சலால் மின் ஊழியர் உயிரிழப்பு; புதுமனை புகுவிழாவுக்கு தயாரான குடும்பம் சோகத்தில்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்தவர் சுபின் (வயது 31). சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி சுபின் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட சுபினின் உடல்நிலை மோசமடைந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுபினுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். புதிய வீடு ஒன்றையும் கட்டி வந்தார். அடுத்த மாதம் வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுபின் எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலிக்காய்ச்சல்

லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகளின் பாதிப்பால் ஏற்படுகிறது, எலிக்காய்ச்சல். இந்தக் கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம். என்றாலும், ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளிடமும் இந்தக் கிருமிகள் காணப்படுவது உண்டு. இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்தத் தண்ணீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும். காலில் காலணி அணிவது போன்ற தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேங்கிய தண்ணீரிலும் மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது, பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும்.

அறிகுறிகள் என்ன?

கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கும். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறி. பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து, நோய் குணமாகிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பயணம் செய்து, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி, அந்தந்த உறுப்புகளையும் பாதிக்கும். அப்போது அடுத்தகட்ட அறிகுறிகள் தோன்றும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here