திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்ஜாமீன் மனு இன்று காலையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் கைதாகியுள்ளார்.
திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இன்று காலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் 2021-26 காலக்கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாகஅன்பில் மகேஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு இன்று காலையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.














