நாடாளுமன்ற வரலாற்றில் 2-வது முறையாக மக்களவை தலைவர் தேர்தல்

0
108

மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தராததால் மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி உள்ளது.

முதன்முறையாக மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் 1952-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதில் தேர்வான கணேஷ் வாசுதேவ் மாவ்லேங்கர், நாட்டின் முதல் மக்களவை தலைவராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற வரலாற்றில், மக்களவை தலைவருக்கான தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இன்று (ஜூன் 26) வாக்குப் பதிவுமுறையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், மீண்டும் அப்பதவிக்காக ஆளும் கட்சிவிரும்பும் ஓம் பிரகாஷ் பிர்லாபோட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷ் போட்டி யிடுகிறார்.

கொடிக்குன்னில் சுரேஷ் எனவும் அழைக்கப்படும் கே. சுரேஷின் தொகுதி கேரளாவின் மாவேலிக்கரா ஆகும். மக்களவைக்கு 8 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தான் போட்டியிட்டதில் 2 முறை மட்டுமே தோல்வி கண்டுள்ளார். 2012 முதல் 2014 வரை மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, காங்கிரஸ் கமிட்டி தேசியச்செயல் பதவியையும் வகித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையின் மூத்த எம்பியான சுரேஷ், தற்காலிக மக்களவைத் தலைவராக தேர்வாகவில்லை. இதுதான், ஜுன் 24-ம் தேதி கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் இடையே நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இதன்மூலம், இருவருக்கும் மக்களவையில் உள்ள ஆதரவு என்ன என்பதும் தெரிந்து விடும். வழக்கமாக ஆளும்கட்சியின் சார்பில் மக்களவைத் தலைவரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை துணைதலைவரும் தேர்வு செய்யப்படுவது மரபு.

இந்தமுறை 99 தொகுதிகளை பெற்றதால் காங்கிரஸ் கட்சி, துணை தலைவர் பதவியைகோரியது. இதில், இருதரப்பினரில் ஒருமித்த கருத்து உருவாகாததால் இப்பதவிக்கு தேர்தல் நடைபெறஉள்ளது.

மக்களவை தலைவர் என்பவர்நாடாளுமன்றத்தின் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். தேசிய அளவில் இவரது பதவிக்கான அந்தஸ்து, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக ஆறாவது இடத்தில் உள்ளது.

முதல் ஐந்து இடங்களில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர்கள், துணை பிரதமர் என்ற வரிசை உள்ளது. மக்களவை தலைவர் பதவிக்குப் போட்டியிட அவர் மக்களவை எம்பியாக இருப்பது தவிர குறிப்பிட்ட வேறு எந்த தகுதிகளும் கிடையாது.

முன்னாள் துணை பிரதமரான ஜெகஜீவன்ராமின் மகளான மீரா குமார், மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக அமர்த்தப்பட்டார். இவருக்கு பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இரண்டாவது பெண் சபாநாயகராக மத்திய பிரதேசத்தின் சுமித்ரா மகாஜன் 2014 முதல் 2019 வரையில் அமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.