பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு

0
146

கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். இதன் நிறைவுநாளில் பக்தர்கள்உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை விதித்தது.

இந்நிலையில், மே 18-ல்நடைபெற்ற ஆராதனை விழாவில், பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கோரி,கரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, மே 18-ல் அங்கப்பிரதட்சண நிகழ்வு நடைபெற்றது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலை கோயில் அர்ச்சகர் அரங்கநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

உத்தரவுகளை மறைத்து… அதில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழாவில்உயர் நீதிமன்ற தடை உத்தரவால் 2015-க்கு பிறகு தற்போதுவரை உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனடிப்படையில் இந்த ஆண்டும்அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் பழைய உத்தரவுகளை மறைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தங்களுக்கு சாதகமான உத்தரவைப் பெற்றுள்ளார். இந்தஉத்தரவை பலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.