அனுமதியின்றி போராட்டம்: ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு

0
65

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஜூன் 22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல் துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

எனினும், திட்டமிட்டபடி கடந்த22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். அப்போது,போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில், தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஹெச்.ராஜா, பாஜகமாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.