திருவான்மியூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 436 டாஸ்மாக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மூடப்பட்ட மதுபானக் கடைகளில் சில மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கம்போல் இயங்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக திருவான்மியூர் எல்.பி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 898) முதல்வரின் அறிவிப்புக்கு பின்னர் மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தினமும் நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியிலேயே இந்தக் கடை உள்ளது. எனவே, இதை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் உன்னிகிருஷ்ணன் கூறும்போது, ‘திருவான்மியூர் எல்.பி சாலையில் (ஜெயந்தி சிக்னல்) உள்ள டாஸ்மாக் கடை, சங்கர வித்யாஷ்ரமம் பள்ளியிலிருந்து 250 மீட்டரில் உள்ளது.
மேலும், திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 300 மீட்டர், ரங்கநாதபுரம், கால்வாய் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா மந்திரம் கோயிலிலிருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ளது.
முதல்வரின் அறிவிப்பையடுத்து, இந்த டாஸ்மாக் கடை கடந்த 15-ம் தேதி மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் மறுநாள் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்பட்டது.
இது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, 500 மீட்டர்தூர வரம்புக்குள் வரும் இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.















