மாதவரம் அருகே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிப்பதற்காக ராட்சத டிரில்லிங் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, இயற்கை எரிவாயுக் குழாய் உடைந்து வாயுக் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீப்பிடித்ததில் 6 கடைகள், ஒரு லாரி மற்றும் ஒரு வேன் எரிந்து சேதமடைந்தன.
சென்னை மீஞ்சூர் அருகே கொண்டக்கரை பகுதியிலிருந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த எரிவாயு குழாய் வலையமைப்பை தனியார் காஸ் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சார கேபிள்களை பூமிக்கடியில் பதிக்கும் பணி ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ராட்சத டிரில்லிங் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. நேற்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் டிரில்லிங் இயந்திரம் எதிர்பாராத விதமாக, பூமிக்கடியில் சென்ற இயற்கை எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியது.
இதனால் அதிக அழுத்தத்தில் இருந்த எரிவாயு நீரூற்று போல பல அடி உயரத்துக்கு பீறிட்டு வெளியேறி திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சாலையோரத்தில் இருந்த மீன் கடை, டிபன் கடை, காய்கறிக் கடை, ஹார்டுவேர் கடை உள்ளிட்ட 6 கடைகள் முழுவதுமாக தீக்கிரையாகின.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி மற்றும் ஒரு வேனும் தீயில் எரிந்து சேதமடைந்தன. அதிகாலை நேரம் என்பதால் கடைகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை. இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
எரிவாயு விநியோகம் நிறுத்தம்
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் காஸ் நிறுவன பொறியாளர்கள், எரிவாயு விநியோகத்தை உடனடியாக நிறுத்தினர். இருப்பினும் சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகே தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க அலட்சியமாக பணியாற்றி இயற்கை எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது மாதவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.















