ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த முடிவா? – டிடிவி தினகரன் கண்டனம்

0
20

ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்; பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வீட்டு சமையலறையில் தொடங்கி தேநீர் கடைகள், உணவகங்கள் வரை பொதுமக்களால் அன்றாடம் உபயோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலின் விலையை உயர்த்துவது மட்டுமல்ல அது குறித்து அரசு சிந்திப்பதே கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனைச் சரிசெய்து ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தி, பொதுமக்களுக்குத் தடையின்றிப் பால் கிடைக்கச் செய்வதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத தவெக அரசு, ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைமுட்டும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் பால் விலையை உயர்த்த ஆலோசிப்பது பொதுமக்களுக்கு தவெக அரசு இழைக்கும் துரோகமாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாலும், பண்டிகை நெருங்கும் நாட்களிலும் கூட மனசாட்சியற்ற முறையில் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம், தற்போது பால் விலையையும் உயர்த்தி பொதுமக்களின் அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்திருப்பது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் மனிதர்களையே கடிக்க முயன்ற கதையைத் தான் நினைவுபடுத்துகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்க நிறுவப்பட்ட ஆவின் நிறுவனம், தற்போது தனியார் பால் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை உயர்த்திக் கொண்டிருப்பதன் மூலம் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களையும் தனியார் நிறுவனத்தை நோக்கி விரட்டியடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ ? என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.

எனவே, ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here