திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் முதல்வர் விஜய்யின் காரை மக்கள் மறித்ததால் பரபரப்பு

0
14

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 3 தலைமுறையாக வசிப்பவர்களைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதை அடுத்து, திருச்சி வந்த முதல்வர் விஜய் வாகனத்தை வழிமறித்த குடியிருப்புவாசிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி செம்பட்டு என்.எம்.டி (NMT) காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் இயங்கி வந்த என்.எம்.டி தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடியிருப்புத் தேவைகளுக்காக, அந்தத் தொழிற்சாலைக்கு எதிரே இவ்விடம் ஒதுக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் ‘தொழிலாளர்கள்’ என்ற அடிப்படையில், மூன்று தலைமுறைகளைக் கடந்து எவ்வித பாகுபாடுமின்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாங்கள் குடியிருந்து வரும் இந்த முழு இடத்தையும் சிலர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, தங்களின் வாழ்விடத்தைக் காப்பாற்றக் கோரி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளை கைகளில் ஏந்தியும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டும் முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். முதல்வரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சாலையின் ஓரமாக அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தமிழக முதல்வர் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதுமான தொகுதி, திருச்சி கிழக்கு தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here