பிரான்ஸில் சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை குறிவைத்து சைபர் தாக்குதல்: ஹேக்கர்கள் கைவரிசை

0
18

பிரான்ஸ் நாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளின் ஃபிரிட்ஜ்கள், ஃபிரீஸர்கள் போன்ற குளிர்சாதன இயந்திரங்களை ஹேக் செய்து, அதில் உள்ள உணவுகளை சேதப்படுத்தி, தீ விபத்து ஏற்படுத்தும் சைபர் தாக்குதலை ஹேக்கர்கள் மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

என்ன நடந்தது? – பிரான்ஸில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ்களின் கட்டுப்பாட்டை தங்கள் வசப்படுத்திய ஹேக்கர்கள், அதன் வெப்பநிலையை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தி உள்ளனர். அதன் மூலம் ஃப்ரெஷ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்களை பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து அதிக வெப்பநிலையில் இயக்கியதால் இயந்திரம் சூடாகி தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல். இதனால் ஒரே நாளில் தேசம் முழுவதும் சேதமான உணவு பொருட்களின் மொத்த மதிப்பு சில மில்லியன் யூரோக்கள் இருக்கும் என தகவல்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிரான்ஸ் தேசிய சைபர் பாதுகாப்பு முகமைக்கு அந்நாட்டு பிரதமர் செபஸ்டியன் உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தங்களை போல் மற்ற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஸ்பெயின், போர்ச்சுகல், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை சைபர் தாக்குதலுக்கு இந்நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள Intermarche, Monoprix, Carrefour, E.Leclerc, Cooperative U உள்ளிட்ட முன்னணி சில்லறை உணவுத்துறை நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று அறிவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சில நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

எப்படி நடந்தது? – சைபர் தாக்குதலுக்கு உள்ளான சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள ஃபிரிட்ஜ்கள் மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தொலைதூரத்தில் இருந்தபடி சூப்பர் மார்க்கெட் ஃபிரிட்ஜ் மற்றும் ஃபிரீஸர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு டென்மார்க்கை சேர்ந்த நிறுவனமான Danfoss, மென்பொருளை வடிவமைத்து வழங்கி உள்ளது.

இத்தகைய சூழலில் அந்த நிறுவனத்தின் மென்பொருளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஹேக்கர்கள், இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட குளிர்சாதன இயந்திரங்கள் பழைய மாடலை சேர்ந்தவை. மேலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த மென்பொருள் அப்லோட் செய்யப்படாதது இதற்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த இயந்திரங்களுக்கான இணைய இணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கடைகளின் முழு எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை. இதுவரை சுமார் 400 கடைகளில் இந்த சைபர் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் அனைத்து மட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இப்போது உணவை ஆயுதமாகப் பயன்படுத்துவது சகஜமாகி உள்ளது என்று ஐரோப்பிய உணவு ஆணையர் கிறிஸ்தோப் ஹன்சன் இந்த சைபர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here