‘குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
அதனால், மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு நிலையை முழுமையாகச் சீராய்வு செய்து, குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுபவமிக்க உளவுத்துறை காவல் அலுவலர்களை நியமித்து, முன்கூட்டியே குற்ற திட்டங்கள் மற்றும் வன்முறை செயல்கள் குறித்து தகவல் சேகரித்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒருங்கிணைந்த சிறப்புக் குழுவை அமைத்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும்.
தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.















