சென்னை: விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ்சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே,ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். படித்த காலத்தில் இருந்தேஆர்எஸ்எஸ் தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ளஅருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.
உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும். இவ்வாறு அவர் கூறினார்.