ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர்ஆலம்கிர் மற்றும் சிலர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் ரூ.4.42 கோடி சொத்தை முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,அவரது முன்னாள் தனிச் செயலாளர் சஞ்சீவ் குமார் லால், லால் மனைவி ரீட்டா மற்றும் வீட்டு பணியாளர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.4.42 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கடந்த 4-ம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் ரீட்டா லால் தவிர மற்ற 3 பேர் மீது ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஜூலை 4-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ஆலம்கிர் ஆலம் பதவி வகித்தார். இந்நிலையில், இவருடைய தனிச் செயலாளர் சஞ்சீவ் குமார் லால் மற்றும் வீட்டுப் பணியாளர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே6—ம் தேதி அமலாக்கத் துறைஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.37.55 கோடி ரொக்கம், கார், நகைகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக, இத்துறை மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு 3.2 சதவீதம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதில், 1.5% அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் ஆலம்கிர் ஆலமிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த மே 16-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.