அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போது வரை, 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப் பட்டுள்ளன. இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில்நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிலும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ஒரு நிலையமான கிண்டி ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் முக்கிய கல்வி நிறுவனங்கள் கிண்டியில் அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு மின்சார ரயிலில் வந்து செல்வோருக்கு வசதியாக, கிண்டி ரயில் நிலையம் இருக்கிறது.
13.50 கோடியில் மறுசீரமைப்பு: இதுதவிர ரேஸ் கிளப், கிண்டி தேசிய பூங்கா, தொழில்பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்வோருக்கு உதவியாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது. இந்தரயில் நிலையத்துக்கு தினசரி 60,000-க்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர்.
இந்த ரயில் நிலையம் ரூ.13.50 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக, புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக நடைமேடைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் எளிதாக வந்து செல்லும் விதமாக, 3 மின்தூக்கிகள் அமைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக,நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மின்தூக்கி அமைக்கும் பணி: நிலையத்தின் 3, 4-வது நடைமேடைகளில் மின்தூக்கி அமைப்பதற்கான கட்டுமானப்பணி முடிந்துவிட்டது. அதேநேரத்தில், 1, 2-வது நடைமேடைகளில் மின்தூக்கி நிறுவும் பணி நடைபெறுகிறது. தற்போது வரை 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நிலையத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, வரும் செப்டம்பரில் தயாராகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.