சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (ஜூலை 10) தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.
இப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முகாமைத்தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் 2018-ம் ஆண்டு இப்பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறுகிறது.
கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7 ஆயிரத்து 165 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த7 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிக்கபட்டுள்ளன. அவை படப்பை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அடுத்த 3 மாதத்துக்குள் செல்லபிராணிகள் வளர்ப்பவர்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்.
உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது. சென்னையில் ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரு நாளில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. வட சென்னையில் ஒரே நாளில் 9 செமீ மழை, 1 முதல் 2 மணி நேரத்தில் பெய்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ளதால் முன்னெச்சரிக்கையாக, தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவன இயக்குநர் கேர்லெட் ஆனி ஃபெர்ணாண்டஸ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.