நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கைதான தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் முடக்கம்

0
50

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்பக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள், தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், இயக்குநர்கள் குணசீலன், மகிமை நாதன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் நிதி நிறுவனம், அவர் நடத்தி வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அவரது அறை, தி.நகரில் உள்ள அவரது வீடு உட்பட அவர் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்நிலையில், தேவநாதன் மற்றும் அவர் தொடர்புடைய 5 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here