காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர். இந்தியாவுக்கு எதிராக பன்னுன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து அவரை இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது.
இந்த நிலையில், பன்னுனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் இந்தியரான நிகில் குப்தா (52 வயது) ஈடுபட்டதாக அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டிஉள்ளது. இந்த நிலையில் நிகில் குப்தா செக் குடியரசில் கைது செய்யப்பட்டார்.
அங்கு பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலை யில் தற்போது அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட் டுவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட்முதன்முதலாக செய்தி வெளியிட்டுள்ளது. புரூக்ளினில் உள்ள பெடரல் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள நிகில் குப்தா, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், “பன்னுனை கொல்ல வேண்டும் எனக் கூறி இந்திய அதிகாரி ஒருவரும், நிகில் குப்தாவும் தொலைபேசி வழியாகவும், மின்னணு தகவல் பரிமாற்றம் மூலமாகவும் பல முறை பேசியுள்ளனர். பன்னுன் கொலை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் நிகில் குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் அந்த இந்திய அதிகாரி உறுதியளித்துள்ளார். இதையடுத்து, குற்றச் செயல்களில் தொடர்புள்ள ஒருவரை பன்னுனை கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்த நிகில் குப்தா முன்பணமாக 15,000 அமெரிக்க டாலர்களையும் வழங்கியுள்ளார். பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா ஏற்பாடு செய்தவர் அமெரிக்க போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய உளவாளியாகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
இந்த சதிச் செயல் நிரூபிக்கப் பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் டெல்லி வருகைக்கு முன்பாக இந்த நாடு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.