பெல்ஜியத்தை அப்செட் செய்த ஸ்லோவாகியா: லுகாகுவின் கோல்களை மறுத்த விஏஆர் தொழில்நுட்பம் | Euro Cup

0
109

நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் – ஈ’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியத்தை அப்செட் செய்தது ஸ்லோவாகியா. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியா இதில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் துடிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு, தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிஸ் செய்தார். 7-வது நிமிடத்தில் ஸ்லோவாகியா அணியின் ஷ்ரான்ஸ் கோல் பதிவு செய்தார்.

அதன் பிறகு பெல்ஜியம் அணி பந்தை எதிரணியின் கோல் போஸ்டுக்கு கடத்தி செல்வதில் மும்முரமாக இருந்தது. ஆனாலும் ஸ்லோவாகியா அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என ஸ்லோவாகியா முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் அட்டாக்கிங் பாணி ஆட்டத்தில் மேலும் ஆக்ரோஷத்தை கூட்டியது பெல்ஜியம். அதன் பலனாக 56-வது நிமிடத்தில் லுகாகு, கோல் பதிவு செய்தார். இருந்தாலும் விஏஆர் ரிவ்யூ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடுவர் அதனை பரிசீலித்தார். அதன் பின்னர் ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த கோல் மறுக்கப்பட்டது.

தொடர்ந்து 86-வது நிமிடத்தில் கோல் போஸ்டின் வலது பக்கத்தில் இருந்து ஒபென்டா கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் லுகாகு. இந்த முறை விஏஆர் ரிவ்யூவில் பந்து ஒபென்டாவின் கையில் பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனை ஸ்னிக்கோவும் உறுதி செய்தது. அதனால் அந்த கோலும் மறுக்கப்பட்டது.

90 நிமிடங்களுக்கு பிறகு கூடுதலாக வழங்கப்பட்ட 7+ நிமிடங்களிலும் பெல்ஜியம் அணியால் கோல் பதிவு செய்ய முடியவில்லை. முடிவில் ஸ்லோவாகியா 1-0 என வெற்றி பெற்றது. நடப்பு யூரோ கோப்பை தொடரில் இதுவரை நடத்துள்ள போட்டியில் மிகப்பெரிய அப்செட்டாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 573 பாஸ்கள் மற்றும் ஆட்ட நேரத்தில் 61 சதவீதம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பெல்ஜியம் அணி. இருந்தும் தோல்வியை தழுவியுள்ளது.