உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று நடைபெறுகிறது.
தைவானுக்கு ஆயுத விநியோகம், ஈரான் விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மே 13 முதல் 15 வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
வியாழன் (இன்று) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் உயர்மட்ட ஆலோசனைகளை நடத்துகிறார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பெய்ஜிங் புறப்படுவதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசுகையில், “ஈரான் விவகாரம் குறித்து ஜி ஜின்பிங்குடன் விரிவாக ஆலோசிக்க உள்ளேன். இருப்பினும், ஈரான் விவகாரத்தில் சீனாவின் உதவி தேவை என்று நான் கருதவில்லை.
அமைதி வழியிலோ அல்லது வேறு வழியிலோ எங்களால் வெற்றி பெற முடியும். போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் குறித்து சீன அதிபர் அக்கறை காட்டுவார் என நம்புகிறேன்” என்றார். சீனாவுடனான பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் முக்கிய இடம்பிடிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தைவான் விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையே புதிய மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சீனா அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ஈரான் போரில் பங்கேற்க மறுத்ததால், அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது பாரம்பரிய நட்பு நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து உலக விவகாரங்களை வழிநடத்தும் ‘ஜி-2′ எனும் புதிய அரசியல் கோட்பாடு வலுப்பெறத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மூலமாக ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.















