ரஷ்யாவில் தேவாலயம், யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்: 15 காவலர்கள் உள்பட பலர் பலி

0
50

ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு மத குரு, 15 போலீஸார், பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.

டகேஸ்டான் மாகாணத்தில் மிகப் பெரிய நகரான மகாச்கலா மற்றும் கடற்கரை நகரான டெர்பன்ட்டில் நடந்த இத்தாக்குதலை தீவிரவாத சதி என்றும் அவர் அறிவித்துள்ளார்

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மகாச்கலாவில் 4 பேரையும், டெர்பன்ட் நகரில் இருவரையும் போலீஸார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். நடந்த சம்பவத்தில் போலீஸார், பொதுமக்கள், மதகுரு என 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து டெலிகிராம் தளத்தில் கருத்து தெரிவித்த ஆளுநர் மெலிகோவ், “ஞாயிறு மாலை டெர்பன்ட், மகாச்கலாவில் நடந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. சமூகத்தை சீர்குலைக்க நடந்த சதி. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களின் இலக்கு என்னவென்பது எங்களுக்குத் தெரியும். போர் நம் வீடு வரைக்கும் நீள்வதை நாம் இன்று சந்தித்துள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது இரு நகரங்களிலும் இயல்பு திரும்பியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

நடந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 24 – 26 ஆம் தேதி வரை துக்க நாட்கள் கடைபிடிக்கப்படும். தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் வெளிப்படையாக உரிமை கோரவில்லை. ரஷ்ய புலனாய்வுக் குழு இந்தத் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.” என்றார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மாஸ்கோவில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 145 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு ரஷ்யாவில் நடந்த பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது.