உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரைநிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள்தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், பிரதமர் மோடிகடந்த 21-ம் தேதி அரசுமுறை பயணமாக போலந்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் நேற்று சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் அவரை உக்ரைனின் உயர்நிலை தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.பின்னர், கீவ் தாவரவியல் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்குமோடி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், ‘கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக தேசத் தந்தைகாந்தியடிகள் திகழ்கிறார். அவர் காட்டிய அமைதி வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பிறகு, தேசிய அருங்காட்சியகத்துக்கு மோடி சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரை ஆரத் தழுவி வரவேற்றார். போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்துக்கு, இரு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மரின்ஸ்கி அரண்மனையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், பிரதமர் மோடியும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, உக்ரைன் – ரஷ்யாபோரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உக்ரைனுக்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். ஆகஸ்ட் 24-ம் தேதி உக்ரைன் தேசிய தினம்கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா 2 அடி முன்னால் இருக்கிறது. போரில் உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும்போது மனம் துடிக்கிறது. நாகரிகமான சமுதாயத்தில் குழந்தைகள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
எந்த ஒரு போரிலும் இந்தியா நடுநடுலையை கடைபிடிப்பது கிடையாது. இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கம் நிற்கிறது. நாங்கள் புத்தர், காந்தியடிகள் பிறந்த மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் உலகத்துக்கு அமைதியை போதித்து வருகிறோம்.
உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே 140 கோடி இந்தியர்களின் விருப்பம். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, ‘‘இது போருக்கான காலம் கிடையாது’’ என்று நேரடியாக கூறினேன். இப்போதும் அதே கருத்தை முன்வைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த சந்திப்பின்போது, மருத்துவம், வேளாண்மை, கலாச்சாரம் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிவாரணஉதவிகளை வழங்குவதாகவும் மோடி உறுதி அளித்தார். முதல்கட்டமாக போர் முனைகளில் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை அவர் வழங்கினார். ஒரு பெட்டியில் உள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்கள் மூலம் 200 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
மனிதாபிமான அடிப்படையில் பரஸ்பரம் வீரர்களை ஒப்படைப்பது, அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, குறிப்பிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த கூடாது. குறிப்பிட்ட எல்லை பகுதிகளை தாண்ட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உக்ரைன் சென்றுள்ளார். கீவ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ரஷ்ய அதிபர் புதினை பிரதமர்மோடி ஆரத் தழுவியது குறித்துஉக்ரைனில் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. இது இந்தியாவின் கலாச்சாரம், மரபு” என்றார்.
போர் தீவிரம்: ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் சுமார் 1,263 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் சமீபத்தில் கைப்பற்றியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முனைகளில் போர் தீவிரம் அடைந்துள்ளது.
குர்ஸ்க் பகுதியில் ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவத்தின் ஆதிக்கம் இருந்த நிலையில் தற்போது ரஷ்யராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. வரும் நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சூழலில் பிரதமர் மோடியின்அமைதி முயற்சி உக்ரைன் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
மோடியின் உக்ரைன் பயணத்தை முன்னிட்டு தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.