மாங்கோடு கிராமம், தேங்காய் பாறை பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் ஷெமீத் (40). இவர் கடந்த மாதம் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அருமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது களியக்காவிளை மற்றும் பளுகல் காவல் நிலையங்களில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மேற்படி போதைப்பொருள் வழக்கு குற்றவாளியான அப்துல் ஷெமீத் (40) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் அப்துல் ஷெமீத் (40) என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.