அபிநந்தனை சிறைபிடித்த பாக். மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு

0
97

2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தனின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (37), தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் ராவல்பிண்டியில் உள்ள அவரது சொந்த கிராமமான சக்லாலா காரிசனில் நடைபெற்றது. இதில், ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டதாக பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கின் போது நடந்த பிரார்த்தனைகளின் படம் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. “மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் எதிரியை எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடினார். இறுதியில் துணிச்சல், தியாகம் மற்றும் தேசபக்தியின் உயர்ந்த மரபுகளை நிலைநிறுத்தி, தனது உயிரைக் கொடுத்தார்.” என்று முனீர் கூறியதாக ISPR தெரிவித்துள்ளது.

மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷாவின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாகவும் ISPR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, அபிநந்தன் வர்தமனைப் பிடித்து, வன்முறை கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி இவர்தான் என்பது தெரியவந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here