நடுவர் ‘விளையாடிய’ போதும் மே.இ.தீவுகள் 10 ரன்கள் முன்னிலை: 2-வது இன்னிங்ஸில் ஆஸி. திணறல்!

0
74

பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக் கழித்தால் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று உள்ளது.

இரண்டாம் நாளில் 10 விக்கெட்டுகள் சாய்ந்தன. ஆட்ட முடிவில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர். இந்த டெஸ்ட் விறுவிறுப்பான நிலையில் உள்ளது, ஆனால் டெஸ்ட் எப்படி முடியும் என்ற கணிக்க முடியாத நிலை உள்ளது. ஆஸ்திரேலியா இன்னும் ஒரு 150-200 ரன்களைச் சேர்க்க முடிந்தால் மே.இ.தீவுகள் சேஸ் செய்வது இந்தப் பிட்சில் மிக மிகக் கடினம். மாறாக ஆஸ்திரேலியா இன்று 3-ம் நாளில் 150 ரன்களுக்குச் சுருண்டால் மே.இ.தீவுகளுக்கு ஒரு அரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.

நேற்று 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் என்று ஆட்டத்தை தொடங்கிய மே.இ.தீவுகள் அணியில் கேப்டன் ராஸ்டன் சேஸ் மற்றும் ஷேய் ஹோப் மூலம் 67 ரன்கள் கூட்டணி கண்டது. பிராண்டன் கிங் 26 ரன்களில் வந்தவுடன் ஹாசில்வுட் வீசிய பெரிய இன்-ஸ்விங்கரை ஆடாமல் விட முடிவு செய்து பவுல்டு ஆகி வெளியேறினார். அதன் பிறகு கேப்டன் ராஸ்டன் சேஸ் 108 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களையும் ஷேய் ஹோப் 91 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும் எடுத்தனர்.

நடுவர் திருவிளையாடல்: முதலில் ராஸ்டன் சேஸ் கம்மின்ஸ் பந்தை பின்னால் சென்று ஆட முனைந்த போது பந்து தாழ்வாக வர கால் கேப்பில் தாக்கியது போல் தெரிய அப்பீலுக்கு நடுவர் தலையசைத்து அவுட் என்று கையை உயர்த்தினார். ஆனால், உடனேயே ராஸ்டன் சேஸ் ரிவ்யூ செய்தார். அதில் பந்து மட்டையில் பட்டது என்பதுதான் சேஸின் ரிவ்யூவிற்குக் காரணம்.

ரிவ்யூ நீக்கமற ஐயமின்றி பேட் டிப் என்று காட்டாவிட்டாலும் அல்ட்ரா எட்ஜில் இரண்டு அடையாளங்கள் பந்து லேசாக மட்டையில் பட்டது போல்தான் காண்பித்தது, சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் வழங்கப்பட வேண்டும். ஆனால், 3வது நடுவர் ஹோல்ட்ஸ்டாக் பந்துக்கும் மட்டைக்கும் இடைவெளி இருக்கிறது என்று முடிவு கட்டினார். அவுட் என்றார். மே.இ.தீவுகள் தவறான தீர்ப்புடன் ரிவ்யூவையும் இழந்தது.

அதே போல் ஷேய் ஹோப் 48 ரன்களில் பியூ வெப்ஸ்டர் பந்தில் மட்டையின் உள் விளிம்பில் பட்டு பின்னால் அலெக்ஸ் கேரியின் அற்புத கேட்சுக்கு அவுட் ஆனது போல்தான் தெரிந்தது. பந்து கிளவ்வில் ஒட்டிக்கொண்டது போல் தெரிந்தாலும் பந்தின் சிறுபகுதி தரையைத் தொட்டது போல்தான் தெரிந்தது. மீண்டும் 3-ம் நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் பந்து தெளிவாக கிளவ்வில்தான் இருந்தது என்று முடிவு கட்டினார். இன்னொரு நடுவர் திருவிளையாடல் தீர்ப்பு ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக அமைந்தது.

இந்த 2 அவுட்களும் ஒழுங்காகக் கையாளப்பட்டிருந்தால் மே.இ.தீவுகள் ஒரு 50 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும். ஆஸ்திரேலியாவும் தோல்வி முகம் காட்டியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எப்படியோ ஆஸ்திரேலியாவுக்கு இந்த நடுவர்கள் சாதகம் முக்கியமான கட்டங்களில் கிடைத்து விடுகிறது.

நல்ல வேளையாக அல்ஜாரி ஜோசப் கடைசியில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 பந்துகளில் 23 ரன்களை எடுத்ததால் மே.இ.தீவுகள் 190 ரன்களை எடுத்து 10 ரன்கள் என்ற மனரீதியிலான ஒரு சாதகத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ஹேசில்வுட், கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சாம் கோன்ஸ்டாஸ் பரிதாபம்: முதல் இன்னிங்ஸில் வழி வழி என்று வழிந்த சாம் கோன்ஸ்டாஸ் ஒரு கேட்சையும் விட்டு, 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் கடும் வேதனையை அனுபவித்தார். டெக்னிக் என்பதே சுத்தமாக இல்லை. அவரை அவர் பாணியில் ஆடவைக்கலாம். அதுதான் ஆஸ்திரேலியாவுக்குப் பயனளிக்கும்.

2-வது இன்னிங்ஸில் முதல் பந்தையே மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டிருப்பார். பிறகு ஷமார் ஜோசப்பின் ஓவரில் இருமுறை கேட்ச் ட்ராப்பினால் லைஃப் பெற்றார். ஸ்லிப்பில் ஜான் கேம்பெல் முதல் கேட்சை விட 2-வது கேட்சை விட்டவர் கிரீவ்ஸ். 38 பந்துகள் வேதனையாக நின்றார் கோன்ஸ்டாஸ். 5 ரன்கள் எடுத்து ஷமார் ஜோசப் பந்தில் பவுல்டு ஆனார்.

இவருக்கு முன்னதாகவே உஸ்மான் கவாஜா இன்-ஸ்விங்கரில் அல்ஜாரி ஜோசப்பிடம் 15 ரன்களில் எல்.பி. ஆனார். ஜாஷ் இங்லிஸ் 12 ரன்கள் பொறுமையாக ஆடி எடுத்து கடைசியில் ஜெய்டன் சீல்ஸ் பந்தை ஆடாமல் விடப்போய் பிராண்டன் கிங் போலவே பவுல்டு ஆனார். கேமரூன் கிரீன் கிரீவ்ஸ் பந்தை எட்ஜ் செய்து 15 ரன்களில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here