கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்பனை செய்த அமேசான், பிக் பாஸ்கெட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உணவு விநியோக உரிமத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கர்நாடகாவில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததும் 15 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உள்ளிட்ட குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஊமத்தப்பூ, ஊமத்தங்காய், ஊமத்தை விதைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனை விசாரித்த கர்நாடக உணவுத்துறை, ஊமத்தங்காய், ஊமத்தை விதை உள்ளிட்டவற்றை உணவு பொருட்களின் வரிசையில் விற்பனை செய்ததால் அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட் உள்ளிட்ட குவிக் காமர்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உணவு விநியோக உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த வகை தாவரம் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெற்றதற்கான அறிவிப்புடன் விற்பனை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பான விளக்க அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.















