அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுக துணைபொதுச்செயலாளர் முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 53-ம் ஆண்டுதொடக்கவிழாவும், செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடந்து வருகின் றன. அவற்றில் ஒற்றுமையுடன் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ‘அதிமுக மூன்றாக,நான்காக உடைந்து விட்டது’ எனசிலர் பேசி வருகின்றனர். பதவிஆசைக்காக செயல்பட்ட அவர்களின் சுயரூபம் தெரிந்ததால் கட்சியிலிருந்து வெளி யேற்றப்பட்டனர்.
கட்டுக்கோப்போடு உள்ள அதிமுக இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். அதே ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்துதொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.