உத்தர பிரதேச பணியாளர் நலத் துறை சார்பில் கடந்த புதன்கிழமை புதிய வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், ஊழல், தீவிரவாதம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் அரசு பணிகளில் சேர தடை விதிக்கப்படும். அரசியலமைப்பு சட்ட அமைப்புகளுக்கு எதிராகப் போராடுவோரும் அரசு பணியில் சேர தடை விதிக்கப்படும்.
எனினும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை பின்பற்றுவோர் அரசு பணியில் சேர எவ்வித தடையும் கிடையாது. அரசு பணியில் சேரும் இளைஞர்களின் பின்னணி குறித்து மாநில உள்துறை விசாரணை நடத்தும். உண்மைத்தன்மை சரிபார்ப்பு குறித்த அறிக்கையை உள்ளூர் போலீஸார் 30 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இளைஞர்களை அச்சுறுத்தும் வகையில் உத்தர பிரதேச அரசு புதிய விதிகளை வெளியிட்டிருப்பதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.














