காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்தும், மேகேதாட்டு அணையை கட்ட வலியுறுத்தியும் கன்னட கூட்டமைப்பின் சார்பில், நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். இதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என வலியுறுத்தினார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் பேருந்து மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சங்கங்கள், உணவக உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்டவை தங்களது ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால், மாநிலம் முழுவதும் நேற்று பள்ளி, கல்லூரிகள், கடைகள், உணவகங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், திரையரங்கங்கள், ஆட்டோ, வாடகை கார்கள் வழக்கம் போல இயங்கின.
அதேவேளையில் பெங்களூருவில் சுதந்திர பூங்கா, டவுன்ஹால், தமிழக எல்லையான அத்திப்பள்ளி, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
பெங்களூருவில் நேற்று கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், போராட்டத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக போலீஸார் அவரை வீட்டிலேயே கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாட்டாள் நாகராஜ், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் குண்டுகட்டாக அவரை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.
தமிழக எல்லையில் அரசு பேருந்துகளை தடுக்க முயன்ற கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்காததால், தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேற்று 10-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் சந்தித்து பேசினர். அப்போது முழு அடைப்பு போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக கூறினர்.
10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.இந்நிலையில், கர்நாடக அரசு 10 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டுள்ளது.















