நாட்டின் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் அலுவலகங்களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்தில் ஊதா வழித்தடத்தில் இயங்கிய ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. கெம்பேகவுடா மெட்ரோ நிலையம் முதல் பையப்பனஹள்ளி வரையிலான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விதான சவுதா, எம்.ஜி.சாலை, இந்திரா நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
10-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊதா வழித்தட மெட்ரோ சேவை முடங்கியதால் பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் 5 கி.மீ. வரை நடந்து சென்றனர். பெரும்பாலானோர் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் சென்றனர்.
கெங்கேரி, எலச்சனஹள்ளி, நாகசந்திரா போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே 11 மணி வரை காத்திருந்த பயணிகள் லாரி, சரக்கு வாகனம் ஆகியவற்றில் ஏறி வீட்டுக்குச் சென்றனர். ஐடி ஊழியர்கள் லாரிகளில் ஏறிச் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. இதனிடையே தொழில் நுட்ப குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேவையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டன. இதையடுத்து நேற்று காலை 5 மணி முதல் மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கியது.
இது குறித்து பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ”உலகின் முதல்தர திறமை படைத்த ஐடி ஊழியர்கள், மூன்றாம் தர அரசின் காரணமாக சரக்கு வாகனங்களில் ஏறிச் செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. லட்சக்கணக்கில் வரி செலுத்தியும் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதியும், போக்குவரத்து வசதியும் அரசு அவர்களுக்கு செய்து தரவில்லை. மெட்ரோ சேவை முடங்கினால் அரசு உடனடியாக போக்குவரத்து வசதி செய்து தந்திருக்க வேண்டும்” என விமர்சித்தார்.















