இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரான் ராணுவம் அறிவிப்பு

0
133

 இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. எதிர்பாராத இந்த திடீர் மோதல் மேற்கு ஆசியாவின் நிலைமையை மீண்டும் சிக்கலாக்கும் என்ற அச்சம் பரவலாக எழத் தொடங்கியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, முதல்முறையாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டது. அதோடு, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தினர். மேற்கு ஆசியாவை மீண்டும் போருக்குள் தள்ளும் அச்சுறுத்தலை இது ஏற்படுத்தியது.

இந்நிலையில், இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய விரும்புகின்றனர்.

அறியாமை அல்லது முட்டாள்தனம் குறுக்கிடாத பட்சத்தில் அமைதிக்கான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, (ஹார்மூஸ் ஜலசந்தி) முற்றுகை முழு வீச்சில் தொடர்ந்து அமலில் இருக்கும். நிலைமை சீராக துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் ராணுவத்தின் கூட்டு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேல் மீதான தாக்குதலை நாங்கள் நிறுத்துகிறோம். அதேநேரத்தில், இஸ்ரேலோ அதன் ஆதரவாளர்களோ தெற்கு லெபனான் உட்பட ஏதேனும் ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்களில் ஈடுபட்டால் முன்பைவிட கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகள் தொடரும்” என தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here